July 2026



ஜூலை 11 தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் எழுப்புதல் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சென்னை ஓசன்னா ஊழியத்தைச் சேர்ந்த போதகர் தாமஸ் சாம் கிருபாகரன் மற்றும் போதகரின் துணைவியார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களுக்காக ஜெபித்தனர். அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக வாழவும், ஊழியம் செய்யவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இக்கூட்டங்களில் பங்கேற்ற வாலிபரின் வாழ்க்கையில் கிறிஸ்து வெளிப்படவும், சமுதாயத்தில் இவர்கள் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.

ஜூலை 12  தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், 'Never give up" என்ற கருப்பொருளின் கீழ் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியம் நடைபெற்றது. வேதாகமப் பாடங்கள், பாடல்கள், கதைகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுடன் கிறிஸ்துவின் அன்பு சிறுவர் சிறுமியரிடையே ஆழமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 800 சிறுவர் சிறுமியர் இவ்வூழியத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற்றனர். இறுதிநாள் விழாவின்போது மாணவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்கள் மூலமாக அநேக சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்படவும், சிறுவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 13  ஜுன் 2 அன்று பக்தியார்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 68 பேர் பங்கேற்றனர். தேவ செய்தியுடன், குடும்பங்களில் பெண்களின் பங்கு குறித்தும், உறவினர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் ஆலயம் கட்டப்படுவதற்கான நிலங்கள் விரைவில் வாங்கப்படவும், பணித்தள விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் உயரவும் ஜெபிப்போம். 

ஜூலை 14 ஜுன் 19 அன்று தெபோரா வேதாகமக் கல்லூரியின் சான்றளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. சுரேஷ் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

ஜூலை 15 கியோட்டி ரன்வே பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகளுக்காகவும், தற்போது நடைபெற்றுவரும் கான்கிரீட் பணிகள் எவ்விதத் தடையுமின்றி விரைவாக நடைபெறவும் ஜெபிப்போம். மேலும், இப்பகுதியில் செயல்பட்டுவரும் இருளின் சக்திகள் மாறவும், சுவிசேஷத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு, தேவனுடைய ராஜ்யம் வல்லமையுடன் கட்டியெழுப்பப்படவும், அநேகர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறவும் ஜெபிப்போம். 


June 2026

 



ஜூன் 11  ஆத்தும ஆதாயப் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு, 'each one catch one' என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆத்தும ஆதாயகப் பயிற்சி முகாமில், பர்சா, ராம்பூர், குஷ்ருபூர் ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 168 பேர் பங்கேற்றனர். இம்முகாமில், சகோ. சுனில், ஆத்ம ஆதாயப் பணிக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் அவசியத்தையும் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், ஆத்தும அறுவடையாளர்கள் பெருகவும் ஜெபிப்போம்.


ஜூன் 12 மே 1 அன்று தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். இம்முகாமில், 450 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். மருத்துவச் சிகிச்சையுடன், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் கூடவே அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.  

ஜூன் 13 தர்பங்கா பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதற்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகின்றோம். மேற்கூரைப் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் பிற கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்தில் விரைந்து முடிக்கப்படவும், தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

ஜூன் 14 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார். கோரியா பணித்தளத்தில் மே 7, 8, 9 ஆகிய தினங்கள் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, 400 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். தொடர்ந்து  பணித்தளங்களில் நடக்கவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவும் ஜெபிப்போம்.


ஜூன் 15 மே 9 அன்று, ஹத்தியாகட் பணித்தளத்தில், திருமண வயதில் உள்ள வாலிபப் பெண்களுக்கான ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரி சஜிலா நார்டன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வசனத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு, தேவ செய்தியையும் அளித்தார்கள். இப்பயிற்சியில் 52 பேர் பங்கு பெற்றனர். பணித்தளங்களில் திருமண வயதை எட்டியிருக்கும் சகோதர சகோதரிகளின் எதிர்காலத்திற்காக ஜெபிப்போம்.

May 2026

 



மே  11 தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில், 180 ஞாயிறுப் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கான வேதாகமத் தேர்வுகளும் நடத்தப்பட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்படியாக பரிசுகளும் வழங்கப்பட்டன. பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அநேக கிராமங்களில் ஞாயிறுப் பள்ளிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம். 

மே  12 ஏப்ரல் 11 அன்று தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்ற எட்டு மணி நேர ஊழியர் குடும்ப உபவாசக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்.  சகோதரி எலிசபெத் குழுவினர் (சென்னை) ஜெபக்குறிப்புகளைக் கூறி ஊழியர்களை ஜெபத்தில் வழிநடத்த, சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும்  மற்றும் காப்பகங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 13 சமஸ்திபூர் பணித்தளத்தில் ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 55 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஸ்டீபன் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், குடும்பத்தினரை கிறிஸ்துவண்டை நடத்தும் கருவிகளாக மாறவும் ஜெபிப்போம். 

மே  14 பர்சா பணித்தளத்தில் ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற ஒருநாள் வேதாகமப் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சி வகுப்புகளில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சுனில் ஆகியோர் வேதாகமத்திலிருந்து பல்வேறு சத்தியங்களைக் கற்றுக்கொடுத்தனர்; இப்பயிற்சி வகுப்பில் 120 பேர் பங்கேற்றனர். விசுவாசிகள் வேத அறிவில் வளரவும், வசனத்திற்கு தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கவும், விசுவாசிகளின் உறவினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

மே 15 கியோட்டி ரன்வே மற்றும் தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் கான்கிரீட் பணிகளுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

April 2026

 


ஏப்ரல் 11 'கஸ்ரைனி பணித்தளத்தில் மார்ச் 11 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்; பணித்தள மக்கள் 80 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர்; சகோ. ஆனந்தன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 12 'ஹாஜ்பூர் பணித்தளத்தில் மார்ச் 20 அன்று ஒருநாள் கன்வென்ஷன் கூடம் நடைபெற்றது; 150 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சாஜன் ஆகியோர் தேவ செய்தியளித்து, ஜனங்களுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், பணித்தள ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 13 'தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையம் மற்றும் கியோட்டி ரன்வே பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் நிறைவேறவும், ஜனங்கள் விரைவில் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், இப்பணித்தளங்களில் ஆத்தும அறுவடை பெருகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 14 'அட்மல்கோலா பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெறவும்; தேவைகள் சந்திக்கப்படவும், அட்மல்கோலா பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஆத்தும ஆதாயப் பணிகள் மற்றும் நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக ஆத்துமாக்கள் கர்த்தரின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 15 'கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கல்விப் பணிகள் மூலமாக 86 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர். நிர்மலி பணித்தளத்தின் கஞ்சர் மக்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கவும், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சிறுவர் கல்விப் பணிகளின் மூலமாக 75 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர்; இச்சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், இவர்களது குடும்பத்தினர் இயேசுவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

March 2026

 


மார்ச் 11 : புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 150 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோ. ஜான் ஜெயக்குமார் வாலிபருக்கேற்ற செய்தியை பகிர்ந்துகொண்டு, வாலிபரை ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். இம்முகாமில் கலந்துகொண்ட வாலிபர் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும், தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரதிபலிக்கவும், உடன்வாலிபரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தவும் ஜெபிப்போம். 

மார்ச் 12 : பர்சா மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 180 பெண்கள் பங்குபெற்றனர். சகோதரி சஜிலா நார்டன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் மாற்றங்கள் உருவாகவும் ஜெபிப்போம். 

மார்ச் 13 : பிப்ரவரி 21 அன்று மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 110 வாலிபர்கள் பங்கேற்றனர். சகோ. வென்னிலவன் மற்றும் ஜெம்ஸ் வாலிபர் ஊழியக் குழுவினர், பாடல்கள், குறுநாடகங்கள் மற்றும் தேவசெய்தியின் மூலமாக வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி, ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை உற்சாகப்படுத்தினர். 

மார்ச் 14 : தர்பங்கா ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணிகளுக்காகவும் மற்றும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 15 : பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து சிறுவர் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்படவும், பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் நற்செய்திக்கு செவிகொடுக்கவும், வீட்டு சபைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம்.  


Feb 2026

 


பிப்ரவரி 10 பகுவாரி கிராமத்தில் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்; தொடர்ந்து இக்கிராமத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கூடிவந்தவர்களுக்காக ஜெபித்தார். இக்கிராமத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும், ஊழியத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 11 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூடுகையில், 750 மாணவர் மற்றும் மாணவியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 950 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 12 தர்பங்கா மாவட்டத்தில் முடிடப்பட்டிருந்த சபையினை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஜனவரி 15 அன்று மீண்டும் திறக்கவும், ஆராதனை நடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார். இம்மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தளங்களில் ஆராதனை எவ்விதத் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 13 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், ஜனவரி 21 அன்று சியோகர் பணித்தளத்தில் புதிதாக Children Club தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணியின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 14 பெனிப்பூர் பணித்தளத்தில் திடீரென வந்த சமூக விரோதிகள், ஜெம்ஸ் ஊழியரை அடித்து, ஆலயத்தின் கதவு மற்றும் முன் வாசலை பூட்டி, தங்கள் மதத்தின் கொடியையும் ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து காணப்பட்டுவரும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.    

Jan 2026

 



ஜனவரி -  13 
ஷாவக்பூர் பணித்தளத்தில் ஒருநாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது; விசுவாசிகள் விசுவாசத்தில் வளரவும், தங்கள் ஜெப வாழ்க்கையில் முன்னேறவும் மற்றும் வசனத்தை அறிந்துகொள்ளவும் இக்கூடுகை வழிவகுத்தது. சென்னையைச் சேர்ந்த சகோ. ரூபன் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், ஆத்தும ஆதாயகர்களாக மாறி கர்த்தருடைய மந்தையில் ஆத்துமாக்களை சேர்க்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  14 மைதிலி  1 கோட்டத்தின் தர்பங்கா மற்றும் சிசோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஜெம்ஸ் பெண்கள் முன்னேற்ற ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு தேவ செய்தியுடன், பெண்களின் வாழ்க்கைக்கான சிறப்பு ஆலோசனைகளையும் வேத வசனங்களின் அடிப்படையில் அளித்து அவர்களுக்காக ஜெபித்தனர். கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மத்தியிலும் தேவனை பிறருக்கு அறிவிக்கவும், தங்கள் குடும்பங்களில் எரியும் தீபங்களாக விளங்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 15 டிசம்பர் 12, 2025 அன்று ராம்பூர் மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 90 பேர் கலந்துகொண்டனர்; சகோதரி சஜிலா நார்டன் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். குளிர் நாட்களில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், பணித்தளங்களில் காணப்பட்டுவரும் ஊழியத்திற்கு எதிராக விரோதங்கள் மாறவும், எதிர்ப்போர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  16 நிர்மாலி மற்றும் மணிகாச்சி ஆகிய பணித்தளங்களில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு தின நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் குறுநாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை எடுத்துக்கூறி, சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளங்களில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஆத்தும அறுவடை இப்பகுதியில் பெருகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  17 கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் டிசம்பர் 21 அன்று ஞாயிறு பள்ளி பிள்ளைகள் மூலம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் வாயிலாக, பங்கேற்ற பணித்தள மக்கள் பலருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில், 260 ஞாயிறு பள்ளி சிறுவர் சிறுமியரும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்கள் மூலமாக சமுதாயமும் குடும்பங்களும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.