

ஜூன் 11 ஆத்தும ஆதாயப் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு, 'each one catch one' என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆத்தும ஆதாயகப் பயிற்சி முகாமில், பர்சா, ராம்பூர், குஷ்ருபூர் ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 168 பேர் பங்கேற்றனர். இம்முகாமில், சகோ. சுனில், ஆத்ம ஆதாயப் பணிக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் அவசியத்தையும் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், ஆத்தும அறுவடையாளர்கள் பெருகவும் ஜெபிப்போம்.
ஜூன் 12 மே 1 அன்று தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். இம்முகாமில், 450 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். மருத்துவச் சிகிச்சையுடன், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் கூடவே அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.
ஜூன் 13 தர்பங்கா பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதற்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகின்றோம். மேற்கூரைப் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் பிற கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்தில் விரைந்து முடிக்கப்படவும், தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
ஜூன் 14 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார். கோரியா பணித்தளத்தில் மே 7, 8, 9 ஆகிய தினங்கள் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, 400 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். தொடர்ந்து பணித்தளங்களில் நடக்கவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவும் ஜெபிப்போம்.
ஜூன் 15 மே 9 அன்று, ஹத்தியாகட் பணித்தளத்தில், திருமண வயதில் உள்ள வாலிபப் பெண்களுக்கான ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரி சஜிலா நார்டன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வசனத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு, தேவ செய்தியையும் அளித்தார்கள். இப்பயிற்சியில் 52 பேர் பங்கு பெற்றனர். பணித்தளங்களில் திருமண வயதை எட்டியிருக்கும் சகோதர சகோதரிகளின் எதிர்காலத்திற்காக ஜெபிப்போம்.