வடக்கு மண்டலம்
நவம்பர் 11 மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் மதுபனி மற்றும் சுற்றியுள்ள பணித்தளங்களைச் சேர்ந்த சபை விசுவாசிகள் சுமார் 450 பேர் உற்சாகமாகப் பங்கெடுத்தனர். இக்கூட்டங்களில், சகோ. எமர்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களை ஜெபத்தில் வழிநடத்தினார். பணித்தள விசுவாசிகளின் சாட்சியுள்ள வாழ்க்கைக்காகவும், விசுவாசிகளின் உறவினர்கள் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 12 பர்சா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல்மையத்தில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமில் 75 பேர் பங்கேற்றனர். பணித்தளங்களில் சிறுவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும். ஞாயிறுப் பள்ளி வாயிலாக அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்தவும் போதிய ஆலோசனைகளுடன், தேவ செய்தியின் மூலமாக அவர்களது உள்ளத்தில் சிறுவர்களைக் குறித்த பாரத்தையும் விதைக்க கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் கல்வி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 13 கோரியா பணித்தளத்தில் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 60 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் வாலிபர்களது வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனையுடன், தேவ செய்தியையும் அளித்து, கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றி நிற்கவும், அவருக்காக சாட்சிகளாக வாலிபத்தில் வாழவும் வாலிபர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது, வாலிபர்களில் பலர் தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் காணப்படும் வாலிபர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், வாலிபர்கள் பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும் ஜெபிப்போம்.
நவம்பர் 14 தர்பங்கா பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், பணித்தள விசுவாசிகள் 350 பேர் பங்கேற்றனர்; சகோ. ராகேஷ் குமார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
நவம்பர் 15 பணித்தளங்களில் ஊழியத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும், ஆலயமில்லாத இடங்களில் விரைவில் ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்பட்டு, விடுதலையோடு ஜனங்கள் தேவனை ஆராதிக்க விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.
