SEP 2025

                                                         வடக்கு மண்டலம்



செப்டம்பர் 11 மதேபூரா பணித்தளத்தில் புதிதாக சீஷத்துவப் பயிற்சி மையத்தினைத் (DTC) தொடங்க கர்த்தர் உதவி செய்தார். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஸ்டீபன் ஆகியோர் ஜெபத்துடன் பயிற்சி மையத்தினைத் தொடங்கி வைத்தனர். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சுவிசேஷங்களாக மாறவும், இவர்கள் மூலமாக அவர்களது சொந்த ஜனங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 12 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தினங்கள், தேவரியா மற்றும் பாரூ பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்களில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டங்களில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களுக்காக ஜெபித்தனர். அநேகர்  பாவப்பிடியிலிருந்தும் மற்றும் பிசாசின் பிடியிலிருந்தும்  விடுதலையாகி, தேவனை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டு வரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 13 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணித்தள மக்கள், வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய தேசம் இரட்சகரை அறிந்து கொள்ளவும், கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் சுவிசேஷத்திற்கு செவி கொடுக்கவும், பணித்தளங்களில் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 14 திமோத்தேயு வேதாகமக் கல்லூரி (TBC), சீஷத்துவப் பயிற்சி மையம் (DTC), பெண்கள் பயிற்சி மையம் (GTC) மற்றும் தையல் பயிற்சி மையம் (SETUP)  ஆகிய பயிற்சி மையங்களில், புதிதாக மாணவ மாணவியரைச் சேர்க்க கர்த்தர் உதவி செய்தார். இப்பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்கள் தேவனுக்குச் சாட்சியாக வாழவும், பயிற்சி அளிக்கும் ஊழியர்களுக்கு தேவன் விசேஷித்த கிருபைகளைக் கட்டளையிடவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 15 சமஸ்திப்பூர், ரொசேரா, கஹல்காவ் ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டுவதற்காக விரைவில் நிலம் வாங்கப்படவும், கியோட்டி ரன்வே பணித்தளத்தில்  வாங்கப்பட்டுள்ள நிலத்தில் ஆலயம் கட்டுவதற்கானத் தேவைகள் சந்திக்கப்படவும், மகுவல் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் விரைவில் நிறைவு பெறவும் மற்றும் கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம்.