November 2026

 



நவம்பர் 11 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், கியோட்டி ரன்வே பணித்தள ஆலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் ஜெபம் மற்றும் ஆராதனையுடன் சிறப்பாக நடைபெற்றது. கோவில்பட்டியைச் சேர்ந்த Nehemiah Church Builders Trust  சகோதரர்கள் ஜெபத்துடன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஆலய ஆராதனைக்காகவும், சுவிசேஷப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.

நவம்பர் 12 தர்பங்கா பணித்தளத்தில் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில், எட்டு பணித்தளங்களைச் சேர்ந்த 325 சகோதரிகள் பங்கேற்றனர். சகோதரி ஆல்மா கிரேஸ் மற்றும் சகோதரி சிஜி ஷாஜன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலம் குடும்பங்கள் மற்றும் சமுதாயம் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

நவம்பர் 13 அக்டோர் 7 மற்றும் 8 தேதிகளில் பத்வா மற்றும் தானாபூர் பணித்தளங்களில்  ஜெம்ஸ் வாலிபர் ஊழியக் குழுவினர் மூலம் நடத்தப்பட்ட வாலிபர் கூடுகையில் 150 வாலிபர் பங்கேற்றனர். தொடர்ந்து, சீத்தாமடி மற்றும் ஜன்ஜார்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகையிலும் 155 வாலிபர் பங்கேற்றனர்; இக்கூடுகைகளில், சகோ. வெண்ணிலவன், சகோ. டேனியல் சுந்தர்சிங் மற்றும் சகோ. தேவபிரகாசம் இம்மானுவேல் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபரை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளங்களில் வாலிபர்கள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.  

நவம்பர் 14 அக்டோபர் 10 அன்று புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வட்டார கன்வென்ஷன் கூட்டங்களில் 175 பேர் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. பெஞ்சமின் பிராங்க்ளின் நார்டன் மற்றும் சகோ. டேனியல் சுந்தர்சிங் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், புதிய ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம். 

நவம்பர் 15 அக்டோபர் 16 மற்றும் 17 தினங்கள், மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற பயிற்சியில் மைதிலி-1 மற்றும் 2 கோட்டங்களின் 110 ஊழியர்கள் குடும்பமாகப் பங்குபெற்றனர். இப்பயிற்சியின்போது, சகோ. சோலோ பிலிப் மற்றும் சகோ. மேத்யூ ஆகியோர் வேதத்தின் ஆழங்களை ஊழியர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். பணித்தளங்களில் சுகவீனமாயுள்ள விசுவாசிகள் குணமடையவும், ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.